இந்திய கிரிக்கெட் அணி 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றவுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா ' விருது வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர் ! இந்த நேரத்தில் பல்பீர் சிங் என்ற முன்னாள் ஹாக்கி வீரர் 'சச்சினுக்கு வழங்குவதற்கு முன் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் !' என சொல்லி இருக்கிறார் ! இதற்கு முன்னும் பல்பீர் சிங் பலமுறை இப்படி சொல்லி இருக்கிறார் ! இந்த தயான் சந்தை பற்றி அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் !
ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன ! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார் ! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை என்கிறார்கள்! 1928 , 1932 , 1936 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் (சம்மர் ) இந்திய அணி தங்கம் வெல்ல இவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் ! இந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ஒரு தங்கத்தை தவிர வேறு எந்த பதக்கமும் நாம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! அப்போது நம் நாடு ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழே இருந்ததால் இந்திய அணி பிரிட்டிஷ் கொடிக்காகவே விளையாடி இருக்கிறது ! அது மட்டுமில்லாது அணியில் கிட்டத்தட்ட பாதி அல்லது பாதிக்கு மேல் ஆங்கிலேயர்களே விளையாடி இருக்கிறார்கள் ! அவர்களுக்கு நடுவில் தயான் சந்த் தன்னுடைய திறமையாலும் , ஆளுமையாலும் தனித்து தெரிந்திருக்கிறார் ! தயான் சந்தின் காலத்தில் இந்திய அணி மற்ற ஹாக்கி அணிகளை துவைத்து துவம்சம் செய்துள்ளது !
1936 இல் பெர்லினில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது 'இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மாயாஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் !' என விளம்பரப்படுத்தப்பட்டதாம் ! இறுதிப்போட்டியில் இந்தியா ஜெர்மனியை எட்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கி தங்கம் வென்றது ! இதில் அதிகபட்சமாக மூன்று கோல்களை தயான் சந்த் அடித்தார் ! தயான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன் , ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார் ! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார் ! சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார் !
இவரைப்பற்றிய சில சுவையான தகவல்கள் :
*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள் ! (ஹா !ஹா !)
*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் ' நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள் ! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார் !' என்று சொல்லி இருக்கிறார் !
*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும் ! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே ! ' என எழுதின !
*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது ! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும் ! (இப்படிப்பட்ட ஒருவர் தான் தயான் சந்த் போல விளையாட முடியும் என குறிப்பதற்காக !)
*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் நம் நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது !
பழங்கதைகள் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் ! 'கிரிக்கெட்டின் கடவுள் ' என ஒருவர் தூக்கி வைத்து ஆடப்படும் நாட்டில் தான் 'ஹாக்கியின் கடவுளும் ' வாழ்ந்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாதல்லவா ? இன்று அவர் மட்டும் அல்ல ஹாக்கியே மறக்கடிக்கப்பட்டு விட்டது ! விளையாட்டில் அரசியல் கலந்தால் இதுதான் நடக்கும் ! ரசிகர்களை குற்றம் சொல்ல முடியாது ! அவர்களை ஈர்க்கும் வண்ணம் நேர்மையான முறையில் திறமையாக ஹாக்கி விளையாட்டை கொண்டு செல்லாதது இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தவறே ! அதனால் தான் அது நம் தேசிய விளையாட்டு என்பதே பலருக்கு மறந்து போனது !


0 comments:
கருத்துரையிடுக