13 February, 2011

Passion - சிறுகதை

ஹேமாவின் திருமணத்திற்கு அருண் சென்று கொண்டு இருக்கிறான் ! ஹேமா அருணின் முன்னாள் காதலி ! அருணுடன்  இவர்கள் இருவரின் நண்பன் பிரபுவும் இருக்கிறான் ! பிரபுவுவின் மூலமாகத்தான் ஹேமா அருணுக்கு  பழக்கமானாள் !அருண் ஆங்கிலப்பத்திரிக்கைகளுக்கு அரசியல் , பொருளாதார கட்டுரைகள் எழுதித்தருபவன் ! எந்த ஒரு நிறுவனத்தின் நிழலிலும் ஒதுங்காமல் பொதுவாக பணியாற்றி வருபவன் ! பத்திரிக்கைகளுக்கு மத்தியில், அவன் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் ! ஆனால் மிஸ்டர் . எக்ஸ்ப்ளோரர் என்ற புனைப்பெயரில் தான் கட்டுரைகள் எழுதுவான் !
அவ்வப்போது கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பேசுவான் !
-----
 ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ,
'உங்க அரசியல் கட்டுரைகள்லயும் எகனாமிக்ஸ் வாசனை வருதே ! '
'அரசியல் மட்டும் இல்ல ! உலகத்துல எல்லாத்துக்கும் எகனாமிக்ஸ் தான் அடிப்படை ! '
'எப்படி சார் ?'
'காச வெச்சு தாங்க இந்த ஒலகமே ஆப்பரேட் ஆகுது ! நடக்குற எல்லா  தப்புக்கும் காசு தாங்க அடிப்படை ! இதுல அரசியல் எப்படி தப்பும் ? ஒரு சின்ன கதை சொல்றேன் ! ஒரு கடைக்கு  மணினு ஒரு சின்ன பையன் டெய்லி போவான் ! கடைக்காரன் ஒரு கைல ரெண்டு ரூபாய் காயினும்  , இன்னொரு கைல அஞ்சு ரூபா காயினும் வெச்சு எது வேணும்னு கேப்பான் ! அந்தப்பையன் தெனமும் ரெண்டு ரூபாய் காயினயே எடுத்துட்டு போவான் ! ஒரு நாள் கடைக்கு வந்த கஸ்டமருக்கு முன்னாடி 'இந்தப்பையன் ஒரு லூசுன்னு நான் காட்டுறேன் பாருங்கன்னு !' சொல்லி அந்த ஆளு , அந்த விளையாட்ட திரும்பியும் விளையாடுறாரு ! பையன் வழக்கம் போல ரெண்டு ரூபாய் காயின எடுத்துட்டு போனதும் அந்த கடைக்காரன் அவரப்பாத்து 'பாத்தீங்களா? அவன் லூசுன்னு !'  அப்டீன்னு சொல்லி சிரிக்கிறான் ! அந்த கஸ்டமர் கடைய விட்டு வெளியில வந்ததும் நாலு கடை தள்ளி அந்த பையன பாக்குறார் ! 'ஏம்ப்பா இப்படி பண்ணுன ? அஞ்சு ரூபாய் எடுத்தாதான ஒனக்கு லாபம் ? ' அப்டீன்னு கேட்டார் ! அதுக்கு அந்தப்பையன் 'நான் என்னைக்கு அஞ்சு ரூபாய எடுக்குறேனோ அன்னிக்கோடா இந்த விளையாட்டு வெலயாடுரத அவர் நிறுத்திடுவார் அதான்!' அப்டீன்னு சொல்லிட்டு போனானாம் ! ம்ம் ! இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது ?'
'யாரையும் கொறச்சு எடை போடக்கூடாது சார் !'
'ம்ம் ! அதுவும் கரெக்ட் தான் ! ஆனா இத சொல்றதுக்கு நீங்க பிலாசபி கிளாஸ்ல இல்ல போய் ஒக்காந்து இருக்கணும் !'
அனைவரும் சிரிக்கின்றனர் !
' வேற  பதில் ?'
ஒரு மாணவன் எழுந்து ,
'பொன் முட்டை போடுற வாத்த ஒரே நாள்ல கொல்லக்கூடாது சார் ! '
'இதுவும் பிலாசபி மாதிரியே இல்ல ! ஆனா சரியான பதில் ! '
இதுபோன்ற பேச்சுக்கள் பேசுவதற்கும் , கட்டுரைகள் எழுதுவதற்கும் மட்டுமே எப்போதும் அவனுக்கு விருப்பம் ! இருந்தும் அவனுடைய வாழ்வில் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி தான் அவனும் , ஹேமாவும் காதலில் விழுந்தது ! ஹேமாவுக்கு இவனைப்போல அரசியல் , பொருளாதாரம் என்றெல்லாம் பேசத்தெரியாது ! ஆனால் அருணுக்கு அனைவரும் கொடுத்த மரியாதை அவளை அவனை நோக்கி இழுத்தது !கிடைத்த  நேரத்தில்  இருவரும் காதல் வளர்த்தனர் !
'இவ்வளவு தாண்டி மணி மேனேஜ்மென்ட் !'
'யப்பா  ! எனக்கு தலை சுத்துது ! எனக்கு இவ்வளவு விசயமெல்லாம் தெரியாது ! புரியவும் செய்யாது ! ஜவுளிக்கடைல தள்ளுபடி போடும் போது கரெக்டா டிரஸ் எடுக்கத் தெரியும் !   அவ்வளவு தான் !'
'அதவிடு ! இந்தியா முன்னேறாம இருக்குறதுக்கு என்ன காரணம் தெரியுமா ?'
'யப்பா சாமி ! வேற ஏதாவது டாபிக் பேசேன் !'
'ஐ பி எல் க்கு பின்னாடி எவ்வளவு பாலிடிக்ஸ் இருக்குனு தெரியுமா ?'
'ஒன்ன பேச விடுறது தான் என் தப்பு ! ' என தலையில் அடித்துக் கொள்கிறாள் !
 அவளுடன் இருக்கும் போதும் அவளுக்கான உலகத்தை கொஞ்சமும் பார்க்காமல் அவன் உலகத்திலேயே தேங்கி விடுவான் ! அதனால் ஹேமாவுக்கு தேவையானதை செய்ய அவனுக்கு நேரமும் இருக்காது ! ஆர்வமும் இருக்காது !
-----
'எந்நேரம் பாத்தாலும் எகனாமிக்ஸ் , பாலிடிக்ஸ் ! ...எனக்குன்னு கொஞ்சம் கூட நேரம் ஒதுக்க முடியாதா ? ' ஹேமா
'என்னால வரமுடியாது ! தெரிஞ்சுக்கிட்டே  எதுக்கு இம்சை பண்ற ?' அருண்
'இன்னிக்கு ஒருநாள் தான வா போகலாம் ! '
'முடியாது !  மொதல்ல இங்க இருந்து போறியா ? எனக்கு நெறைய வேலை இருக்குது ! '
'இப்பவே இப்படி ! ஒன்ன எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ ?'
'நான் இப்படித்தான் !  ஒனக்கு வேணும்னா நயன் டூ சிக்ஸ் ஜாப்ல இருக்குறவனா பாத்து  கல்யாணம் பண்ணிக்க ! '
'இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு ஒனக்கு இவ்வளவு கோபம் வருது ? லீவு நாள் ஒரு நாள் பீச்சுக்கு கூப்டதுக்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?'
'யார்டி ஆர்பாட்டம் பண்றது ? வரமாட்டேன்னு சொன்னா கெளம்ப வேண்டியது தான ? என்ன எதுக்கு தொந்தரவு பண்ற ?'
' நாம ரெண்டு பேரும் சேந்து பீச்சுக்கு போய் ஒரு அஞ்சு  மாசம் இருக்குமா ? ஏதோ தெனமும் நான் ஒன்ன வேலைய விட்டுட்டு ஊர் சுத்தக் கூப்புடுற மாதிரி இருக்கு நீ பேசுறது ! '
'எனக்கு என் வேலை தான் முக்கியம் !'
'மனுஷன் வாழறதுக்கு தான் வேலை பாக்கணும் ! வேல பாக்குறதுக்காக வாழக்கூடாது ! '
' நான் இப்படித்தான் ! பிடிக்கலைன்னா போய்க்கிட்டே  இரு ! '
'எனக்கு லைப்ப என்ஜாய் பண்ணத்தான் ஆசை ! ஒன்ன மாதிரி ஒக்காந்து ஆராய்ச்சி பண்ண எனக்கு இஷ்டம் இல்ல ! '
'அப்ப போடி  ! இங்க என்ன ஒனக்கு வேலை ? எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு கோவில் , தியேட்டர்ன்னு ஊர் ஊரா சுத்து ! '
'அப்படித்தான் சுத்தப் போறேன் ! ஓன் கூட ஒக்காந்து நாலுசுவத்தையே திரும்பத் திரும்ப பாத்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் ! இன்னையோட என்னப் பிடிச்ச இம்சை ஒழிஞ்சதுன்னு நெனச்சுக்கிறேன் ! '
'கெளம்புடி ! எனக்கு நெறைய வேலை இருக்கு! '
'சைக்கோ ! '
இது ஒரு சிறிய சம்பவம் ! ஆனால் இப்படித்தான் ஹேமாவும் , அருணும் பிரிந்தனர் ! பல நாள் ஹேமா மனதில் தேக்கி வைத்திருந்த சலிப்பு மொத்தமும் அன்று வெளியே வந்தது! அதற்குப்பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை ! அருணுக்கு அவளை  தொலைபேசியில் அழைத்துப் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை ! இனிமேல் இப்படிப்பட்ட உறவுகள் தேவையில்லை என அவனுக்குப்பட்டது !அதனால் அமைதியாக இருந்து விட்டான் !
-----
இன்று ,
'இருந்தாலும் லவ்வரோட கல்யாணத்துக்கு போறதுக்கு ஒரு தில்லு வேணும்டா !' பிரபு
'அவ தான் திரும்பத் திரும்ப கூப்டா ! ' அருண்
'உலகத்துலேயே எக்ஸ் லவ்வர  கல்யாணத்துக்கு கூப்ட பொண்ணு  ஹேமாவாத்தான் இருக்கும் ! யப்பா ஒங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுக்குரதுக்குள்ள மண்டை வெடிச்சுடும் ! '
அருண் சிரிக்கிறான் !
'ஏண்டா சிரிக்குற ? ம்ம் ! எனக்கு புரிஞ்சு போச்சு ! தமிழ் சினிமா மாதிரி கடைசி நேரத்துல எதுனா ட்விஸ்ட் வந்து ஹேமாவை கல்யாணம் பண்ணிடலாம்னு பாக்குறியா ?'
'அடப்போடா ! என்ன மாதிரி ஆள , விட்டுப்போனா தான் அவ நல்ல இருப்பா ! அதான் அவ சண்ட போட்டு போனதும் அவள தொந்தரவு பண்ணாம ஒதுங்கி வந்துட்டேன் ! அவ நல்லா  இருந்தா அதுவே போதும் ! '
'இந்த 'எங்கிருந்தாலும் வாழ்க!' பிட்டு எல்லாம் இங்க ஓட்டாத!'
'அட ! எனக்கு சினிமா பாக்க பிடிக்காது ! ஷாப்பிங் ஷாப்பிங்னு டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது ! ஆனா அவளுக்கு இது தான் முக்கியமான விஷயம் ! நாங்க ரெண்டு பேரும் சேந்தா சரியா இருக்காது ! அதனால தான்டா பேசாம ஒதுங்கிட்டேன் ! '
'அப்ப மூடிட்டு இருக்க வேண்டியது தான ? கல்யாணத்துக்கு எதுக்கு வர ?'
'அவதான் கூப்டா !'
'கல்யாணம்னா ஒரு பேச்சுக்கு  கூப்டதான் செய்வாங்க ! அதுக்காக சோறு திங்க உடனே கெளம்பி வந்துர்றதா ?'
'போடா லூசு !  ' நான் உன் ஸ்பீடுக்கு வரமுடியாது ! நாம  ரெண்டு பேரும் பிரிஞ்சது தான் சரி ! நீ என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் ! நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் ! நல்ல பிரெண்டா  உன்ன கல்யாணத்துக்கு கூப்டுரேன் ! வா ! வரலன்னா கொன்னுருவேன் ! ' அப்டீன்னு சொன்னா ! அதான் கல்யாணத்துக்கு வரேன் ! லவ்வர்ஸ் பிரிஞ்சுட்டா மொறச்சுக்கிட்டே ஒதுங்கித் தான் போகணுமா என்ன ? பழையபடி நார்மலா இருக்க கூடாதா ?'
'யப்பா ! சாமி ! ரெண்டு பேரும் சேந்து மாறி மாறி நெஞ்ச நக்குறீங்க போங்க ! '
இருவரும் திருமண அரங்கத்தை சென்றடைகின்றனர் !
இன்னும் அரைமணி நேரத்தில் திருமணம் ! ஹேமாவும் , மாப்பிள்ளையும் தயாராக அமர்ந்து இருக்கின்றனர் ! ஹேமா மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறாள் ! அதை சந்தோசத்துடன் பார்த்துக்கொண்டே அருண் அமர்கிறான் ! சில நிமிடங்கள் கழித்து அருணை பார்க்கிற ஹேமா , வலது கையை மட்டும் மெலிதாக உயர்த்தி கையை காட்டுகிறாள் ! அவன் சிரிக்க , அவளும் சிரிக்கிறாள் !
'என்னடா எதுனா மேஜிக் நடக்குமான்னு பாக்குறியா ?'
'நீ உதை வாங்காம போக மாட்ட !'
'அப்புறம் கொஞ்சம் கூட பீலிங்கே இல்லியா ?'
'லேசா இருக்கு ! ம்ம் ! இருந்தாலும் ஓகே ! என்ன கல்யாண வீட்ல மத்த பொண்ணுங்கள பாக்கும் போது  மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு ! ம்ம் ! வாழ்கை இப்டியே தான் போகணும்னு இருந்தா நான் என்ன பண்ண முடியும் ? '
'நீ எப்ப பாத்தாலும் இன்பிளேசன், ரிசஷன்னு பேசுறத நிப்பாட்டு ! அதுக்கப்புறம் லைப் ஓகே ஆயிடும் ! வேலை பாக்க வேண்டியது தான் அதுக்காக இப்பிடியா ? '
அந்நேரம் தூரத்தில் சிவப்பு நிற ஆடையில் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை பார்க்கிறான் ! மனதில் மெல்லிய வருத்தம் எழ , அவளை பார்ப்பதை தவிர்த்து மேடையை பார்த்தே அமர்கிறான் !
அந்நேரம் ஹேமாவின் தோழி ஒரு பெரியவரை அருணிடம் அழைத்து வருகிறாள் !
'அருண் ! சார் பார்த்தசாரதி ! உன்னோட பெரிய பேன் !'
'ஹலோ சார் ! 'அருண்
'நிஜமா நீங்க தான் மிஸ்டர் . எக்ஸ்ப்ளோரரா?' பார்த்தசாரதி
அருண் சிரித்தபடியே 'ஏன் சார் அப்டி கேக்குறீங்க ?'
'இல்ல நான் பார்ட்டி , பார்ட்டி பைவ் ரேஞ்ச்ல  இருப்பீங்கன்னு நெனச்சேன் ! நீங்க ரொம்ப சின்ன ஏஜா இருக்கீங்க ! '
அருண் சிரிக்கிறான் !
அந்நேரமே பெரியவர் தன் நண்பர் ஒருவரை அழைத்து அறிமுகம் செய்து வைக்கிறார் !
'இவர் தான் ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட் அருண் ! '
'ஓ ! கிரேட்  சார் ! லாஸ்ட் வீக் ப்ளாக் மணி பத்தி ஒரு  ஆர்டிகில் படிச்சேன் பிரமாதம் ! '
அப்படியே மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் ! திருமணம் நடக்கிறது ! சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக மேடையில் ஏறி வாழ்த்து தெரிவிக்கின்றனர் !
கணவரிடம் அருணை அறிமுகம் செய்து வைக்கிறாள் !
'இது  அருண் !  என்னோட ......... ம்ம் ' ஹேமா என்ன சொல்ல எனத் தெரியாமல் தயங்க,
'பிரெண்ட் ! ' என்கிறான் அருண் !
அதைக்கேட்டு பிரபு அமைதியாக சிரிக்கிறான் !
பிறகு ஹேமா  ' வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அருண் ! யூ ஆர் கிரேட் ! '
'நீங்க  ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பியா இருக்கணும்!  அவர் ரொம்ப லக்கி ! ' என அமைதியாக சொல்லி விட்டு நகர்கிறான் !
பிறகு அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக தயாராக நிற்கின்றனர் !
புகைப்படமெடுப்பவர் அனைவரையும் சிரிக்கச் சொல்ல , பிரபு மெதுவாக அருணை எட்டிப்பார்க்கிறான் ! பிறகு கீழே இறங்கி வருகின்றனர் !
'டேய் போட்டோ எடுக்குறப்போ அவர் சிரிக்க சொன்னாரே ! அப்போ நீ கண்கலங்குன மாதிரி தெரிஞ்சதே ! '
அருண் சிரித்தபடியே 'என்னைய சொல்லாத ! தமிழ் சினிமா பாத்து நீ தான் ரொம்ப கெட்டுப் போய்ட்ட ! ' என்கிறான் !
பிறகு அருண்  ஆள் இல்லாத நாற்காலிகளுக்கு நடுவே அமைதியாக அமர்ந்து திருமணமண்டபத்தை பார்க்க அவன் தனித்தீவு போல இருப்பதாக அவனுக்கு தோன்றியது! மனதில் வெறுமை சூழ அமைதியாக அமர்ந்து இருக்கிறான் ! அப்போது பெரியவர் பார்த்தசாரதி அருணை அழைக்கிறார் !
'சார் ! நான் மட்டும் இல்ல ! என் பொண்ணும் உங்களுக்கு பெரிய பேன் ! நீங்க கல்யாணத்துக்கு வந்துருக்கீங்க அப்டீன்னு சொன்னதும் பாத்தே தீரணும்னு வந்துட்டா ! இது தான் என் பொண்ணு கல்பனா ! ' என அருணின் பின்புறம் கை காட்டுகிறார் ! அருண் திரும்பிப் பார்க்க, சற்று நேரத்திற்கு முன் அவன் பார்த்துக் கொண்டு இருந்த சிவப்பு நிற ஆடை அணிந்த அந்தப்பெண் அமைதியாக நின்று கொண்டிருக்கிறாள் !
' நீங்க பேசிக்கிட்டு இருங்க ! நான் வரேன்!' என நகர்கிறார் !
 அறிமுகப்படலம் முடிந்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் ! அப்போது அங்கு வரும் பிரபுவிடம் கல்பனாவை அறிமுகம் செய்து வைக்கிறான் அருண் ! கல்பனா ஏதோ கேட்க அருண் விளக்க , கல்பனா கன்னத்தில் கை வைத்து அவன் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவனையே ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள் ! அவளை பிரபு பாவம் போல பார்க்கிறான் !
'அப்போ இந்த வீக் என்ட் சென்னைல மீட் பண்ணுவோம் ! ' கல்பனா
'ஆமாங்க மீட் பண்ணுவோம் ! ' பிரபு
'நான் அவர் கிட்ட சொன்னேன் ! ' என சொல்லிவிட்டு கல்பனா நகர ,
'இவன் கூட போனா  ஷேர் மார்கெட்டு , மீன் மார்கெட்டுன்னு பேசி ரெண்டு நாள்ல பைத்தியம் ஆக்கிடுவான் !  என் கூட வந்தா ஷாப்பிங் மால் , சத்யம் தேட்டர் எல்லாம் கூட்டிட்டு போவேன் ! ' என பிரபு புலம்ப ,
'டேய் ! அமைதியா இருடா ! அவ காதுல விழுந்துறப்போகுது!'
'ஐயோ ! வேணாம் வேணாம்னு ஒதுங்கிப் போறவன் கிட்டயே சரியா வந்து சிக்குராங்களே! ஏர்வாடிக்கு தான் போகணும்னு அவ தலைல எழுதி இருந்தா நான் என்ன பண்ண முடியும் ?' என்கிறான் !
தொலைவில் சென்ற கல்பனா அங்கிருந்து ஒருவித மனநிறைவுடன் அருணை பார்த்து சிரிக்கிறாள் ! அருணும் மெலிதாக புன்னகைக்கிறான் !

பத்து ஆண்டுகள் கழித்து ,
காலையில் நடைபயிற்சி செய்ய பூங்காவுக்குள் நுழைகின்றனர் அருணும் , கல்பனாவும் !
அவர்களை பார்த்ததும் இன்னொரு தம்பதிகள் அவசரமாக மற்றொரு வழியாக வெளியேறுகின்றனர் ! அதைப் பார்த்த ஒருவர் 'ஏன் சார் இப்டி ஓடுறீங்க ?'
'அதோ ! அங்க வராங்க  பாருங்க  ரெண்டு பேர் !'
'ஆமா ! அதுக்கென்ன ?'
'அவுங்க ஹஸ்பண்ட் , வொய்ப் ! சரியான ரம்பக்கேசுங்க ! அவுங்ககிட்ட சிக்குனா பெட்டிகடைல ஆரம்பிச்சு ஆன்லைன் ட்ரேடிங் வரைக்கும் பேசுவாங்க ! நேத்தே எங்கள  ஒருவழி பண்ணிட்டாங்க ! காதுல ரத்தம் வராத குறை தான்! நீங்களும் அவுங்க கிட்ட சிக்காம  ஓடுங்க  ! '
-----

3 comments:

Kalirajan சொன்னது…

Nice story. beautiful ending.

Ishu mad on blue சொன்னது…

anna read story anna gud human nature ah nala express panirundheenga anna veena vambu pudikama casualah expresspanirundahdhu highlite anna HATS OFF keep on doing this anna

Manojkumar சொன்னது…

Story romba romba romba supera irunthathu athuvum antha final touch simply great!!