20 January, 2011

பென்னி குக்

இன்று ஆண்டிப்பட்டி சென்று இருந்த போது , உசிலம்பட்டியில் ஆரம்பித்து  வழியெங்கும் போஸ்டர்கள் , பேனர்கள் பார்த்தேன் ! அவற்றில்
'ஜனவரி 15 - பென்னி குக் பிறந்தநாள் !
எங்களுக்கு நீரும் சோறும் தந்த வள்ளலுக்கு நன்றி !' என்று இருந்தது !
யார் இந்த பென்னி குக் ?
கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு முன்பு , பொறியாளராக பணியாற்ற இந்தியா வந்த ஆங்கிலேயர் ! தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் தண்ணீர் பிரச்சனையில் வாடுவதை பார்த்து கேரளா பெரியாற்றில் அணை கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார் ! அரசாங்கம் தந்த பணத்தில் அணை கட்ட ஆரம்பித்தார் ! ஆனால் மழை வந்து அதுவரை முடித்த வேலைகளை  கெடுக்க , மேற்கொண்டு அவர் கேட்ட பணத்தை ஒதுக்க மறுத்துவிட்டது ஆங்கிலேய அரசு ! அரசிடம் அணைகட்ட போராடித் தோற்றுப்போன பென்னி குக் தன் சொத்துக்களை எல்லாம் விற்று அணையைக்  கட்டினார் ! அது தான் முல்லைப் பெரியாறு அணை ! வேற்று தேசத்து மக்களின் நலனுக்காக  தன் சொந்தக் காசை செலவழித்த பென்னி குக்கின் பெருந்தன்மையை  பாராட்ட வார்த்தைகளே  இல்லை ! அவர் செய்த உதவியால் தான் விவசாயம் செழித்தது ! அதற்கு நன்றிக்கடனாக  தேனி மற்றும் அந்த வட்டார மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு  பென்னி குக் என்று பெயர் சூட்டுகின்றனர் ! அந்தப்பகுதிகளில் இந்த பெயரில் ஓடும் ஆட்டோக்கள் , கடைகளை பார்க்கலாம் !
பென்னி குக் செய்த உதவியை மறக்காமல் இன்றும் அவர் பிறந்தநாளை கொண்டாடும்  நம் மக்களின் பாசமும் , விசுவாசமும் வியக்க வைக்கிறது !
எங்கோ இருந்து  வந்து ஒருவர் நம் மக்களை காப்பாற்றினர் !
ஆனால் இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் முல்லை பெரியாறு அணையைக்  காப்பாற்ற துரும்பைக் கூட கிள்ளி எறிய மாட்டேன் என்கிறார்கள் !
கவனம் மக்களே ! நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது !