29 December, 2010

மூணார்

இந்த ஊருக்கு செல்லும் முன் பெரிய குழப்பமே இருந்தது ! அது என்னவென்றால் இந்த ஊரின் பெயரை  மூணார் என்பதா? இல்லை மூணாறு என்பதா? என்று . பேருந்துகளிலும் விதவிதமாகவே  எழுதி இருந்தனர்! அந்த ஊருக்கு சென்று இருந்த போது கடைகளில் பெயர்ப்  பலகைகளை பார்த்தேன் ! அதிகப்படியான இடங்களில் மூணார் என்றே எழுதி இருந்தது ! எனவே நாமும் இனி அவ்வாறே அழைக்கலாம் ! 2007 இல் மெப்கோவில் EEE இல் குப்பை கொட்டிய நாங்கள் ஒன்றாக எங்காவது செல்லலாம் என முடிவு செய்தபோது  பரிசீலனையில் வந்த இடங்கள்  கோவா , திருவனந்தபுரம் ,கொச்சின் மற்றும் மூணார் . கடைசியில் மூணார் செல்லலாம் என்று முடிவானது. பதினான்கு பேரால் தான் செல்ல முடிந்தது ! ஆனால் இதை இப்படி சொல்வது சரி இல்லை ! பதினான்கு பேராவது சென்றோம் ! என்பது தான் பொருத்தமாக இருக்கும் . கடந்த 24 ம் தேதி இரவு  சிவகாசியில் 'மன் மதன் அம்பு' இரண்டாம் காட்சி பார்த்து விட்டு நாங்கள் (செந்தில் , சுரேஷ் , நான் ) மாட்டுத்தாவணிக்கு சென்ற போது மணி காலை 4 .45  . அப்போது மதுரைக்கு சம்பந்தமே இல்லாத ஆடையில்  பளிச்சென்று  நடமாடிக் கொண்டு இருந்தனர் பிரவீனும் , ராஜ்குமாரும் . சனிக்கிழமை காலை ஆறு மணிக்குள் மதுரையில் இருந்து கிளம்பினால் தான் பத்து மணிக்காவது மூணாருக்கு செல்ல முடியும் என முன்னரே அறிவித்து இருந்தோம் ! ' அப்படில்லாம் யாரும் வரமாட்டாங்க  நீ வேணா பாரு !' என முதலில் இருந்தே சொல்லிக் கொண்டு இருந்தான் அமரன் . ஆனால் அவன் சொன்னதை பொய்யாக்கும் வண்ணம்  பதிமூன்று பேர் ஆறு மணிக்குள் வந்து விட்டனர் ! வராத அந்த ஒரு ஆள் யார் ? அமரன் !!! காலை ஆறு மணிக்கு நாங்கள் அவனை செல் போனில் அழைத்த போது
நாங்கள் : டேய் ! நாங்க எல்லாரும் வந்துட்டோம் ! நீ எங்க வர்ற ?
அமரன் : தெரியலடா!
நாங்கள் : எந்த எடத்த கிராஸ்  பண்ணுறன்னு பாத்து  சொல்லு!
அமரன் : ஒரு கார் எங்க பஸ்ஸ கிராஸ் பண்ணுதுடா !
சுத்தம் !!!
கடைசியாக ஒன்பது மணிக்கு வந்தான் ! அதுவரை அனந்தகிருஷ்ணனின் வீட்டில் பொழுது போக்கினோம்! அங்கேயே காலை உணவு ! பொங்கல் , இட்லி . ஒன்பது மணிக்குப்பிறகு பயணம் தொடங்கியது ! சென்னையில் இருந்து  அன்ரிசர்வுடில் வந்திருந்தனர்  ஸ்ரீநாத்தும் , பாபுவும் ! பாபு சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தான் !     
 'பார்ரா ! பாபு அங்க இருந்து  ப்ளைட்ல வந்து இங்க  அன் ரிசர்வுடுல வந்துருக்கான் !'
'ப்ளைட்ல  அன்ரிசர்வுடு கெடயாது ! அதான் ! இல்லைனா அதுலயும் அன்ரிசர்வுடுலயே வந்துருப்பான் ! '
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த மோகன் குமார் ! ம்ம் ! அங்கு போயாவது திருந்தி இருப்பான் என்று பார்த்தால் சுத்தம் ! இன்னும் மோசமாகத்தான் ஆகி இருந்தான் ! சுறா போடுங்கடா ! வேட்டைக்காரன் போடுங்கடா ! சித்து + 2 போடுங்கடா ! என்று ஒரே தொல்லை ! இதில் 'என்னப்பத்தி எதுனா கெத்தா எழுதி ஏத்தி விடுங்கடா !' என்று விண்ணப்பம்  வேறு ! ராஜ் குமார் வேறு அர்ஜென்டினாவில் இருந்து இப்போது தான் இந்தியா வந்திருக்கிறான் ! அதனால் அனைவரும்  வெளிநாடு சென்று வருவதைப்  பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் ! செந்திலைத் தான் அவர்கள் நிறுவனத்தில் ஆன் சைட் ஆசை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போல ஏமாற்றி வருகிறார்களே ! அவன் அந்த கடுப்பில் இருந்தான்! இதில் பிரவீன் வேறு அவனுக்கு விசா இருக்கிறது என்றதும் பயல் கடுப்பாகி விட்டான் .
தேனி தாண்டியவுடன் தான் கச்சேரி ஆரம்பமானது ! வாகனத்திலேயே பீட்டர்  ஸ்காட்  ! ஆனால் பெரிய அளவில் எதுவும் விளைவுகள் தெரியவில்லை !
 மூணாருக்கு செல்லும் வழியில் இருபது கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருக்குமிடம் தான் பூப்பாறை ! அங்கு தான் எங்கள் காட்டேஜ் !  காட்டேஜ் சென்றவுடன் பீட்டர்  ஸ்காட் உபயத்தில் நன்றாக தூக்கம் வந்தது ! சுரேஷ் பாபு கழிவறைக்குள் சென்று விட்டு வெளியே வந்து ' உருளைக்கிழங்கா  சாப்டேனா  வெறும் காத்து தாங்க வருது ! 'என்றான். இது போதாது என்று அடுத்தநாள் 'கழிவறையை நாறடித்து விட்டு வருகிறேன்!' என தெம்பாக சொல்ல , எனக்கும் , சரவணனுக்கும் பயங்கர சிரிப்பு . அப்புறம்ஒரு வழியாக கிளம்பி மூணார் சென்றோம் ! வழியில் வியூ பாயிண்ட் என்று சொல்லி ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினார் ஓட்டுனர் . அங்கு அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லை ! ஆனால் ஒரு சின்னக்  கடையில் சோளமும் (அவிக்கப்பட்ட மற்றும் வாட்டப்பட்ட இரண்டும் கிடைத்தது) , இளநீரும் விற்றனர்  . அப்புறம் தான் புரிந்தது .கொண்டை  ஊசி வளைவில் எங்காவது கடையை போட்டால் அது தான் வியூ பாயிண்ட் என்று ! அப்புறம் அங்கு இருந்து கிளம்பி செல்லும் போது வழியில் சின்ன அருவி ஒன்று இருந்தது ! அங்கு புகைப்படங்கள் எடுத்து விட்டு கிளம்பினோம் ! பாபுவின் கூலர்சைப் போட்டுக்கொண்டே அத்தனை பேரும் மாற்றி மாற்றி படமெடுத்தோம் . அதிலும் செந்திலின் அலும்பு ! யப்பா சாமி ! (பயபுள்ள அந்த கருமத்த போட்டா அழகா வேற இருக்கானா ! முடியல !)  மூணாரில்  அங்கும்  இங்கும் உலார்த்தி விட்டு இரவுக்கு தேவையான உணவு மற்றும் இன்ன பிற 'சரக்குகளை ' வாங்கிக் கொண்டு அறைக்குத்  திரும்பினோம் . கேரளா ஸ்டேட் பெவரேஜஸ் கார்பரேசனின் கடையை தேடுவது கடினமாக இருந்தது ! நம் ஊரில் கருணாநிதியின்  புண்ணியத்தால் (???!!!) அந்தச் சிரமம் இல்லை . கடையில் மக்கள் வரிசையில் நின்றனர் . 'சரக்கு' வாங்கியவுடன்  பில் வேறு கொடுக்கின்றனர் . ம்ம்ம் ! ! !  அது கிறிஸ்துமஸ் இரவு என்பதால் ஊரே களைகட்டி இருந்தது ! அறைக்கு செல்லும் போது வேனில் 'சிங்கம்' திரையிடப்பட்டது . மோகன் தான் கைதட்டி ரசித்துக் கொண்டு இருந்தான் . அறைக்கு செல்லும் போது மலைப்பயணம் ஒத்துக்கொள்ளாமல் எனக்கு மயக்கம் வந்ததால் அறைக்குச் சென்றவுடன் படுத்துத் தூக்கி விட்டேன் ! அதற்குப் பிறகு நடந்த பல கொண்டாட்டங்களை தவறவிட்டு விட்டேன் ! அப்புறம் தான் எம் சி  கச்சேரி நடந்தது ! ம்ம் சிதம்பரத்தின் புண்ணியத்தில் தான்  அது தீர்ந்து போனதாம் !  பின்னர் இந்த சுற்றுலாவின் நினைவாக வாங்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது ! அது தான் இது !

 அடுத்தநாள் காலை வழக்கம் போல அனைவரும் தாமதமாக எழுந்தோம் ! கவனிக்க முதல் நாளில் நாங்கள் எந்த இடத்திற்கும் செல்லவில்லை ! இரண்டாம் நாலாவது எங்காவது உருப்படியாக செல்லலாம் என்று கிளம்பி நாங்கள் போன போது வழியில் ஒரு பூங்கா வந்தது . அங்கு போய் என்ன பார்க்க என்று அந்த இடத்தை  புறக்கணித்து விட்டு நாங்கள் போய்  நின்ற இடம் மாட்டுப்பட்டி  அணை! (அந்த அணையும் சுற்றுப்புறமும் மிகவும் அழகாக இருக்கிறது !)அங்கு படகு சவாரி செல்வது தான் சிறப்பு ! நாங்கள் போய் நின்றால் கவுண்டரை மூடி வைத்து இருந்தனர் . இரண்டு மணிக்கு சீட்டுகள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை தான் இருந்தது. சரி காத்து இருக்கலாம் என்று பார்த்தால்  அங்கு மொத்தமே ஆறு படகுகள் தான் ! ஒரு படகில் அதிகபட்சம் ஐந்து பேர் தான் செல்ல முடியும் (அதற்கு 350 ரூபாய் கட்டணம் !) . அதற்கு வரிசையில் அறுபது பேர் நின்று கொண்டு இருந்தனர் இது வேலைக்கு ஆகாது என்று அங்கு இருந்து கிளம்பி விட்டோம் ! அடுத்து எக்கோ பாயிண்ட் சென்றோம் ! அங்கு தண்ணீர் அதிகமாக இருந்தது ! அங்கு எதிரொலி கேட்கும் என்பதால் , கத்தினால் தான் அதை ரசிக்க முடியும் ! ஸ்ரீநாத் தான் முதலில் கத்தினான் ! ஆஆஆஆ ! என்று ! நன்றாக எதிரொலி கேட்டது ! அங்கு புகைப்படம் எடுக்கும் போது(அவன் கேமராவை கையில் வைத்து ) ஸ்ரீநாத் வழுக்கி விழுந்தான் .ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அந்த போஸில் படமெடுப்பது போல சமாளித்தான் ! இதே போல பாபநாசத்தில் விஜயகுமாரும் செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது (விஜயகுமார் : ஆமா ! இத இப்போ உன்கிட்ட கேட்டாங்களா ?). புகைப்படங்கள் எல்லாம் facebook , orkut இல் போடுவதற்கு ஏற்ப நன்றாக இருக்கவேண்டும் என ஆளாளுக்கு சொல்லி கொண்டோம் . இப்போதெல்லாம் புகைப்படமெடுப்பதே சோசியல் நெட்வொர்க்குகளில் போடுவதற்குத் தான் ! ஹா ! ஹா ! இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் பாபு !  பேஸ்புக்கில் அட்டகாசம் தாங்க முடியவில்லை . பிறகு அங்கு இருந்து கிளம்பினோம் ! அனைவரும் அடுத்தநாள் வேலைக்கு செல்ல வேண்டும் ! இரவு ரயிலை பிடிக்க வேண்டும் என்பதால் வேகமாக கிளம்பி விட்டோம் .வரும் வழியில் தான் நாங்கள் போகாத அந்த பூங்காவை கவனித்தோம் ! எல்லாம் பெண்கள் கூட்டம் ! 'ஆஹா ! வட போச்சே !'  என பெரு மூச்சு விட்டபடியே அங்கு இருந்து நகர்ந்தோம் !. அப்போது தான் ஜெயக்குமார் திடீரென கவிஞர் போல பேச ஆரம்பித்து விட்டான் ' பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி ! அவுங்களுக்கு பூ தான் பிடிக்கும் ! அதான் பூங்காவுல இருக்காங்க ! ' என்றான் . ஆக மொத்தத்தில்உருப்படியாக அங்கு எதுவும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை . ஆனால் இந்த சுற்றுலா மனதுக்கு நிறைவாக இருந்தது ! திரும்பி வரும்போது ஆனந்த் சொன்னது ' காட்டேஜ்ல  காலைல வந்து காப்பி வேணுமான்னு கேட்டாங்க ! நானும் 'பரவாயில்லையே !' அப்படீன்னு நெனச்சுக்கிட்டு கொண்டு வரச் சொன்னேன் ! கடைசில பாத்தா அதுக்கு பில்லப் போட்டுட்டாய்ங்க!' என்றான் .   ரயிலில் டிக்கெட் இல்லாததால் ஸ்ரீநாத் அன் ரிசர்வுடில் செல்லலாம் என்று முடிவு செய்து இருந்தான் ! விஜயகுமாரும் டிக்கட் இல்லாததால்  சேது என்ற பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட (செந்திலும் அவன் நண்பன் இன்னொருவனும் பதிந்து வைத்து இருந்தது !)டிக்கட்டில் செல்லலாம் என முடிவு செய்து இருந்தான் ! பிறகு அன் ரிசர்வுடில் செல்ல இருந்த ஸ்ரீநாத்தும் அவர்களுடன் சென்றான் . அதாவது , டிக்கட் பரிசோதகர் வரும்போது மட்டும் யாராவது ஒருவர் கழிவறையில் ஒழிந்து கொண்டு மற்றொருவர் ,தான் தான்  சேது என்று சொல்லி  பரிசோதகரை ஏமாற்றலாம் என்பது அவர்கள் திட்டம் . ஸ்ரீநாத்திடம் மட்டும் டிக்கட் சேது என்பவரின் பெயரில் இருக்கிறது  என்பதை சொன்ன செந்தில் , விஜயகுமாரிடம் இதை சொல்லாமல் விட்டுவிட்டான் . பரிசோதகர் வந்துவிட்டு போய்விட்டார் என்று நினைத்து விஜயகுமார் வெளியே வர , அவர் இவனிடம் 'பெயர் என்ன?' என்று கேட்டு இருக்கிறார் . இவன் திருதிரு என்று முழிக்க , 'சேது!' என்று பின்னால் இருந்து குரல்  கொடுத்து இருக்கிறான் செந்தில் , பிறகு விஜயகுமார் 'சேது!' என்று சொல்ல .....பரிசோதகர் பிடித்து விட்டார் . பிறகென்ன ......அறுநூத்தி அம்பது ரூபாய் அபராதம் விதித்து விட்டார் . ஸ்ரீநாத்தும் , விஜயகுமாரும் செய்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே  முடியாது . இவர்களை ஒரு இரண்டு நாலாவது சிறையில் வைத்து இருக்க வேண்டும் ! சே சே இந்த கால இளைஞர்களிடம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை . இது ஒரு சமூக ஆர்வலராக  என்னை மிகவும் வேதனைப்பட வைக்கிறது ( எப்புடி ? )  இனிமேலாவது என்னைப் போல  நேர்மையாக இருங்கள் நண்பர்களே ! ஸ்ரீநாத் , விஜய்யை கூட மன்னித்து விடலாம் . இந்தத்  தவறை செய்யத் தூண்டிய செந்திலை மன்னிக்கவே  முடியாது ! இனிமேலாவது இவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன் ! (இந்த பிட்டு போதுமா? )   ம்ம் அப்புறம் , ஊட்டி , கொடைக்கானல் போல இங்கும் வீட்டில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் கிடைக்கின்றன . கேரளா என்றாலும் மூணாரில் தமிழ் வாசனை தான் அதிகமாக உள்ளது .செல்லும் வழி எங்கும் தேயிலைத் தோட்டங்கள்  தான். அட்டைப்பூச்சிகள் இந்த தோட்டங்களில் அதிகமாக  இருக்கும் என்கின்றனர் . விஜயகுமார் மீது கூட ஒன்று ஏறிவிட்டது .


மேல்வரிசை - இடமிருந்து வலம் : சிதம்பரம் , ஸ்ரீநாத் , பாபு , வினோத்பாபு, செந்தில்குமார் , ஜெயக்குமார்
கீழ்வரிசை - இடமிருந்து வலம் :மோகன்குமார் , அனந்தகிருஷ்ணன், சரவணக்குமார், பிரவீன்குமார் , அமரன் , ராஜ்குமார் , விஜயகுமார் , சுரேஷ்பாபு 
செந்திலை தவிர யாரும் இதுவரை மூணார் சென்றது இல்லை என்பதால் இது ஒரு நல்ல அனுபவம் .
மற்ற புகைப்படங்களை காண கீழே இருக்கும் இணைப்புகளை அழுத்தவும் !
http://picasaweb.google.com/ramvinothbabu/DropBox
மதுரையில் வேனை ஏற்பாடு செய்து கொடுத்த ஜெரால்டுக்கும் , பூப்பாறையில் காட்டேஜ் ஏற்பாடு செய்து கொடுத்த பாபு ஊசுப்புக்கும்  நன்றிகள் ! ! !
வரும் கோடைகாலத்தில் கோவாவுக்கு செல்லப் பார்க்கலாம் !
----- 
The objective of new year is not that we should have new year . It is that we should have a new SOUL - G.K. Chesterton (சத்தியமா இவரு யாருன்னு எனக்கு தெரியாது !) 
ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்தினால் தான் சரியாக இருக்கும் ! So , Wishing you and your family a happy new year !!!

2 comments:

Mohankumar சொன்னது…

nice da.... it luks like a real story da.

Babu சொன்னது…

Superb da... Nice memories...