16 December, 2010

ஸ்பெக்ட்ரம் - சிறுகதை

சண்டிகர் , காலை 6  மணி 
நடைபயிற்சிக்கு செல்ல வீட்டில் இருந்து  வெளியே வருகிறார் ஹர்தேவ் சிங். முப்பத்தி ஐந்து வயதான ஹர்தேவ் சிங்கிற்கு யுவராஜ் என்ற மூன்று வயது குட்டிப்பையன்  இருக்கிறான். இருள் மெது மெதுவாக விலக இதமான காலைக்குளிரில்  சாலையில் நடக்கிறார் ஹர்தேவ் . அட்டகாசமான வேகத்தில் வரும் லாரி அவரை அடித்துத் தூக்கி எறிகிறது. சம்பவ இடத்திலேயே உயிரை விடுகிறார் ஹர்தேவ் .
-----
புதுடெல்லி , காலை 11 மணி
சிபிஐ அலுவலகம் , உளவுப்பிரிவு
பதட்டத்துடன்  டிஐஜி  சந்திரகாந்த் படேலின் அறைக்கு வருகிறார் அமித் கோஷ் . 
'சார் !' அமித்
'சொல்லுங்க !' படேல்
'லீவ்ல போன ஹர்தேவ் லாரி  ஆக்சிடன்ட்ல இறந்துட்டார் !'
'வாட் ?'
'அண்ட்  இட் மே  பீ  அன்  எக்சிக்யூசன்!'
'ம்ம்ம்ம் ஒண்ணு பண்ணுங்க ! தேவ் வொர்க் பண்ணுன டாஸ்க் பத்தின கம்ப்ளீட் டீடைல், அவரோட பேக் அப் எல்லாம் த்ரீ ஓ  கிளாக்குள்ள எனக்கு வந்தாகணும் ! ஜல்தி ! ஜல்தி !'
-----
தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வழியாக மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக தகவல் நாடெங்கும் பரவிவிட்டது . ஓரளவு ஆதாரங்களும் வெளிவந்துவிட்டது . துறை அமைச்சர் கோபால் செய்வது அறியாது  இருக்கின்றார் .இப்போது மத்தியிலும் , மாநிலத்திலும் கூட்டணி வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கும் தேசியக்கட்சியும் , மாநிலக்கட்சியும் கலக்கத்தில் இருக்கின்றன . இதுமட்டும் இல்லாது தொழிலதிபர் சந்தீப் சுக்லா, தரகர் மந்தாகினி  போல இந்த ஊழலில் தொடர்புள்ள மற்ற நபர்களும் பதட்டத்தில்  இருக்கின்றனர் .
-----
புது டெல்லி, பிற்பகல் 1 மணி  
பிரதமரை கைப்பாவையாக வைத்து இருக்கும் தேசியக்கட்சியின் தலைவி கேத்தரினின் வீடு
'எதிர்கட்சி எல்லாம் பார்லிமண்ட் கூட்டுக்குழு இந்த ஊழலைப் பத்தி விசாரிக்கணும்னு சொல்றது உங்களுக்கே தெரியும் !' பிரதமர்
'எந்த ஊழல்னு சரியா சொல்லுங்க பிரமோத் ஜி ! நம்ம ஆளுங்க எல்லா விஷயத்துலயும் கலந்து கட்டி அடிக்கிறாங்க இல்ல !' கேத்தரினின் மகன் அவினாஷ்
'ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் !' பிரதமர்
'என்ன பண்ணலாம்னு நீங்க நெனைக்குறீங்க ?'கேத்தரின்
'கூட்டுக்குழு விசாரணைன்னு முடிவானா நமக்கு தான் பிரச்சன ! நம்ம ஆளுங்களும்  அவ்வளவு பித்தலாட்டம் பண்ணி இருக்காங்க !'பிரதமர்
' எலக்சனுக்கு முன்னாடியே இந்த மினிஸ்டரில கோபால் ஏதோ தப்பு  செஞ்சு இருக்காருன்னு தெரிய வந்துச்சே ! அதுக்கப்புறமாவது அவருக்கு போஸ்டிங் தராம இருந்து இருக்கணும் !'அவினாஷ்
'அதுக்கு தான் பெரியவர் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே ! அவரு பொண்ணு கூட  கோபாலுக்கு தான் இந்த மினிஸ்டரிய தரணும்னு அடம்பிடிச்சா! நம்ம சொந்தக்கால்ல நிக்காட்டி இப்படி எல்லாம் அனுசரிச்சு தான் போகணும் !' பிரதமர்
'ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்ல இருந்து ரிப்போர்ட் வராம இருந்திருந்தா பிரச்சன இவ்வளவு பெருசா ஆகி இருக்காது இல்ல ?'கேத்தரின்
'அப்படி எல்லாம் சொல்ல முடியாது ! சுப்ரீம் கோர்ட்  இத சாதாரணமா விட்டு இருக்காது ! எப்படியும் எல்லாம் வெளிய வந்து இருக்கும் ! இருந்தாலும்  சிஏஜி  ரிப்போட்டா  கோர்ட் பெருசா எடுத்துக்கல ! மஜும்தார் (எதிர்கட்சித் தலைவர் )தான் ஏதோ வேலை செஞ்சு இந்த எவிடன்ஸ் வெளிய வர காரணமா இருந்து இருக்கார் !  'பிரதமர்
'எதிர்கட்சிங்கன்னா எப்பவும் இப்படி ஏதாவது செய்யத்தான் செய்வாங்க ! நாம இனி என்ன பண்ணலாம்னு பாக்கலாம் ! இப்ப கோபால ராஜினாமா பண்ண வச்சாச்சு ! நீங்க இந்த விசயத்த பாத்து ஹேண்டில் பண்ணுங்க ! யாருக்கு வேணா பிரச்சன வரலாம் ! நம்ம கட்சிக்கும் , நம்ம ஆளுங்களுக்கும் எந்த கெட்ட பேரும் வரக்கூடாது !' கேத்தரின்
'ஆமா ! பிரமோத் ஜி இந்த ஊழல் இந்தியாவுல நடந்ததுலயே பெரிய ஊழல் ! இத மொத்தமா அந்த மாநிலக்கட்சி மேல திருப்புறதுல தான் உங்க திறமையே இருக்கு ! பாத்து பண்ணுங்க ! அவுங்கள இத வெச்சே எந்திரிக்க விடாம செஞ்சா தான் ,  நாப்பது வருசத்துக்கு முன்னாடி நம்மள  விட்டுப்போன அந்த மாநிலத்தோட நாற்காலி நம்ம கைக்கு வரும் !' அவினாஷ்
பிரதமர் தலையாட்டி பொம்மை போல தலை ஆட்டி விட்டு வருகிறார் .
-----

புதுடெல்லி , பிற்பகல்  4  மணி
சிபிஐ அலுவலகம் , உளவுப்பிரிவு
ஆவணங்களை சுட்டிக்காட்டி 'இது எல்லாம் என்ன ?' படேல்
' ஸ்பெக்ட்ரம்  இஸ்யூல சம்மந்தப்பட்டவங்களோட  டெலிபோன் ரெகார்ட்ஸ் ! ம்ம்ம்    இது வந்து இன்கம்டேக்ஸ் ரெகார்ட் பண்ணுனது சார் ! இது இஸ்யூ பெருசானதும் நம்ம டிபார்ட்மன்ட்  தனியா ரெகார்ட் பண்ணுனது சார் !' அமித்
'ஏதாவது இதுல இருந்து தெரியுதா உங்களுக்கு ?'
'எல்லாமே ஸ்டேட் பார்ட்டிய கார்னர் பண்ணுற எவிடன்ஸ் தான் சார் !'
'அப்புறம் பிசினஸ்மேன்  சுக்லா பத்தி எதுவும் டீடைல் ?'
'பெரிசா எதுவும் இல்ல சார் ! இதுவரைக்கும் பப்ளிக்ல லீக் ஆன மேட்டர் மட்டும் தான் இருக்கு !'
'வேற !'
'பினாமி பேருல கொஞ்ச கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் அலாட் பண்ணி இருக்காங்க !'
'என்ன மாதிரி கம்பெனிங்க ?'
'கன்ஸ்ட்ரக்சன் கம்பனிங்க!'
'கம்யூநிகேசனுக்கும்  கன்ஸ்ட்ரக்சனுக்கும் என்ன சம்மந்தம் ? இடியட்ஸ் ! அப்புறம் அந்த லேடி ? ம்ம் ப்ரோக்கர் மந்தாகினி ?'
'அதுவும் முழுசா கெடைக்கல ! சார் !'
'ம்ம்ம்ம்ம்ம்ம் !'
'சார் ! ஹர்தேவ் ?'
'ம்ம்ம்ம் தேவ் டீம்ல இருக்குற மத்த ரெண்டு பேர் எங்க ?'
'மிலிந்த் மணி லாண்ட்ரிங் சம்பந்தமா டீடைல் கலெக்ட் பண்ண என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் போயி இருக்காரு ! '
'யாதவ் ?'
யோசித்தபடியே பதட்டத்துடன் 'இன்னிக்கு ஆபீஸ் வரல !'
'டேமிட்!'  என மேசையை  ஓங்கி தட்டிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடுகிறார் படேல் .
-----
கொலபா, மும்பை , பிற்பகல் 4 .05 மணி
தொழிலதிபர் சந்தீப் சுக்லாவின் வீடு
'டேப்  வெளில  வந்ததுக்கு காரணமா இருந்தது யாருன்னு பாரு ! இது கூட ஓகே !ஆனா இனிமே எந்த டேப்பும் வெளியில வரக்கூடாது! தமிழ்மணி மினிஸ்டரா வந்தா பிரச்சனைன்னு சொல்லி தான் மந்தாகினிய வெச்சு இவ்வளவு கஷ்டப்பட்டு கோபாலைக் கொண்டு வந்தோம் ! முட்டாப்பய தொழிலுக்கு புதுசா அதான் இவனுக்கு நேக்கு போக்கு தெரியல !' சுக்லா
'சுக்லா ! மந்தாகினி  மீடியாவுல ரொம்ப பேசுறா ! அவளால எதுவும் பிரச்சனை இல்லியே ? ' சுக்லாவின் நண்பன் அசோக் ஜோஷி
'சென்ட்ரல் விஜிலன்ஸ்ல இருந்து  எல்லா இடத்துலயும்  அவள என்கொயரி பண்ணப்போறது நம்ம ஆளுங்களா தான் இருக்கும் ! சமாளிச்சிடலாம் ! அப்படி முடியலைனா போட்டுத்தள்ளிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்! 100 வருசமா கட்டிக்காத்துக்கிட்டு வர்ற குடும்ப கௌரவத்துக்கு எந்த கெட்ட பேரும் வந்துரக் கூடாது!  '
-----

புதுடெல்லி , பிற்பகல்  4 . 10 மணி
ஹர்தேவ் சிங்கின் சக அதிகாரியான யாதவ் வீட்டிலேயே மின்சாரம் தாக்கி இறந்து போய் இருந்தார் .
'மிலிந்த் ! எங்க இருக்கீங்க ?' படேல்
'என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்ல சார் !'
'மிலிந்த் ! ஆபீஸ விட்டு வெளில வந்துராதீங்க ! உள்ளயே  பத்திரமா இருங்க ! நானும் அமித்தும் அங்க வந்துகிட்டு இருக்கோம் !'
-----
கோவா , பிற்பகல் 4 .30 மணி
தொலைபேசியில் 'என்ன ஆச்சு வேலை முடிஞ்சதா ?' பிரதீப் நாயர்
'ஹச் , வொய்  ஓகே ஜி ஆனா எம் மிஸ் ஆயிடுச்சு ஜி ! ' மறுமுனை
'இந்த மாதிரி வேலை எல்லாம் ஆரம்பிச்சா முழுசா முடிக்கணும் ! இல்ல திரும்ப வந்து நம்ம கழுத்தையே பிடிக்கும் ! இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஓகே ஆயிடணும் சரியா ?'
'ஓகே ஜி !'
தொலைபேசியை வைத்துவிட்டு தன்னுடன் அமர்ந்து இருப்பவனிடம் , 'ஹர்தேவ் , யாதவ் மேட்டர் முடிஞ்சுது ! ஆனா இந்த மிலிந்த் தப்பிச்சுட்டான் ! '
'விடுங்க ஜி ! நம்ம பசங்க முடிச்சுடுவாங்க !'
'இல்ல ! இந்நேரம் அவுங்க பாஸ் சந்திரகாந்த் படேல் தெளிவாகி இருப்பான் ! இனிமே கொஞ்சம் சிக்கல் !'
-----
இரண்டு நாட்கள் கழித்து ,
அகமதாபாத் 
'கோபால்  மட்டும் இல்லாம நாமளும் மாட்டுவோம் ! அதான் அந்த எவிடன்ஸ் எல்லாத்தையும்  அழிக்க சொல்லிட்டேன்! அந்த சிபிஐ  ஆபீசர்ஸ் கூட ரெண்டு பேரும் காலி , ஒருத்தன் தான் எப்டியோ தப்பிச்சுட்டான் !அவன சந்திரகாந்த் தான் எங்கயோ பத்திரமா வெச்சு இருக்கான் !' தேசிய கட்சியின் மத்திய மந்திரி ஒருவர்
'வேலைய யார்கிட்ட கொடுத்தீங்க ?' தேசியக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் மற்றொரு மாநிலக்கட்சியின் தலைவர்
'எல்லாம் நம்பிக்கையான ஆளு தான் !'
-----
இரண்டு நாட்கள் கழித்து ,
கோவா
இரண்டு அதிகாரிகளையும் கொன்ற பிரதீப் நாயரின் இடத்திற்கு வருகிறார் சந்திரகாந்த் படேல்
'வா ! படேல்  வா ! நான் இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாதே ! நீ எப்படி வந்த ?'
'என்னப்பத்தி உனக்குத்  தெரியாதா ?'
'ம்ம்ம் ! சந்திரகாந்த்நா மாஸ்டர்  பிரைன்!  அப்புறம் என்ன ?'
'ஹர்தேவ் , யாதவ் ......ம்ம்ம் ஏன் ?'
'வேறவழி இல்ல ! கைவைக்கக் கூடாத இடம் வரைக்கும் போய்ட்டாங்க ! உன் கீழ வேல பாக்குறதுனால  நீ கொடுத்த சுதந்திரம் இப்ப அவுங்க உயிரையே எடுத்துருச்சு !'
'ஏன் பிரதீப் ?உன் பையனுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கொடுக்குறேன்னு சொன்னாங்களா ?'
'என் பிரெண்ட்ஸ்லயே  நீ தான் உலகம் புரியாத முட்டாள் ! இத என்ன அவ்வளவு சாதாரணமான விஷயம்னு நெனச்சியா ? ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற காசோட பிரான்ஸ்ல செட்டில் பண்ணுறேன்னு சொன்னாங்க! ம்ம்ம் ! இந்த சிபிஐ டைரக்டர் போஸ்ட்ல நேர்மையா இருந்து இதுவரைக்கும் நான் என்ன சாதிச்சேன்?  இனி  பாரிஸ் வாழ்க்கை, பாக்கெட் எல்லாம் பணம் ! இந்தியாவுக்கு பை பை !'
'ம்ம்ம் ஹர்தேவோட பையன் இப்போ அப்பா இல்லாம நிக்குறான் !'
'சுனாமி வந்தப்போ லட்சம் பேர் செத்தான் ! அது மாதிரி செத்துட்டான்னு நெனச்சுட்டு போகச் சொல்லு ! அதான்  கவர்ன்மென்ட்ல இருந்து காம்பன்சேசன் வருதுல்ல !'
சொல்லிவிட்டு சிரித்து முடிப்பதற்குள் , துப்பாக்கியால் பிரதீப் நாயரை சந்திரகாந்த் சுட்டுக் கொல்கிறார்.
'எல்லா எவிடன்சையும்  அழிச்ச நீ ! அந்த ரெகார்ட்ஸ கடைசியா அக்செஸ் பண்ணுனதுக்கான அடையாளத்தையும் அழிச்சு இருக்கலாம் !'
கள்ளத்துப்பாக்கியை வீசி விட்டு அங்கு இருந்து நகர்கிறார் படேல் .
-----
இரண்டு நாட்கள் கழித்து ,
புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படுகிறார் .
அவரை அழைத்து பிரதமர் பேசுகிறார்
'நேர்மையா விசாரிக்கலாம் ! உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது ! ஆனா நம்ம கட்சிக்கோ , நம்ம கட்சி ஆளுங்களுக்கோ எந்த கெட்ட பேரும் வரக்கூடாது ! எல்லாமே அந்த தமிழ்நாட்டு கட்சி மேல தான் திரும்பணும். எவிடன்ஸ்  நமக்கு எதிரா எதுவும் இருக்கக் கூடாது !சுப்ரீம் கோர்ட்ல ரிப்போர்ட் வைக்கிறதுக்கு முன்னாடி என் டேபிளுக்கு வந்துரணும்!'
-----
சென்னை, இரவு 11 மணி 
அனைத்து பத்திரிக்கைகளும் , செய்தி நிறுவனங்களும் கோபால் மீதும் , அவர் சார்ந்த  கட்சியின்  மீதும் குற்றம் சாட்டுகின்றன . மாநில முதல்வரும் , கட்சித்தலைவருமான  அறிவழகன்  கோபாலை  அழைத்துப்  பேசுகிறார்
'பயப்படாதய்யா ! நான் இருக்கேன்ல ! '
கோபால்  அழுதபடியே ' நான் சம்பாதிச்சது எல்லாத்தையும் உங்க கிட்ட கொடுத்துட்டேன் ! நீங்க சொல்லி தான் நான் எல்லாத்தயும் செஞ்சேன் ! என் தலைய மட்டும் காப்பாத்தீருங்க !'
'நான் இருக்கேன் பயப்படாதய்யா ! முத்துசாமி கூட போய் கொஞ்சம் நிதானமா இருந்துட்டு வீட்டுக்கு போ ! அப்புறம் கொஞ்ச நாளைக்கு காருக்கு  டிரைவர் வெச்சுக்காத !நீயே ஓட்டு! ஏன்னா அவுங்க வழியாவும் விஷயம் எல்லாம் வெளிய போகும் ! சரியா ?'
'சரிய்யா !'
'அப்புறம் ஏதோ போன் கொடுப்பான் முத்துசாமி ! அதையும் வாங்கிக்க ! அது நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு ! அதுல எவனும் ஒட்டுக் கேக்க முடியாதாம்! சரியா ! போயிட்டு வா !'
முத்துசாமியுடன் பிராந்தி குடித்துவிட்டு தனியாக காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார் கோபால்  .
இரவு 1 மணி
போதையில் இருக்கும் கோபால்  சாலையில் காவல் துறை அதிகாரி காட்டும் பாதையில்  செல்கிறார் . கைப்பேசி ஒலிக்கிறது .
மறுமுனையில் அறிவழகன் ' கோபால் ! என் குடும்பத்தையும் , கட்சியையும் காப்பாத்த  வேற வழி தெரியல! மன்னிச்சிடு !'
'அய்யா ! என்ன சொல்றீங்க ?'
வாயை மூடுவதற்குள் கார் கட்டிமுடிக்கப்படாத அந்த பாலத்தின் மேலிருந்து அசுர வேகத்தில் கீழே விழுகிறது .
-----
அடுத்தநாள் ,
பத்திரிக்கை சந்திப்பில் அறிவழகன் ,
'நேற்று இரவு என்னிடம் பேசும்போதே அவர், தான் நிறைய தவறு செய்து விட்டதாக சொல்லி வருத்தப்பட்டார் . அவரது நடத்தையால் நானும் அவர் மீது வருத்தத்தில் இருந்தேன் . அவர் செய்த தவறுக்காக அவரை கட்சியை விட்டு நீக்க  உள்ளதாக கூறினேன். அவர் அழுதார். இருந்தும் என் மனம் கரையவில்லை . நம் மீது நம்பிக்கை வைத்த தமிழ் மக்களுக்கு நம் தோலை செருப்பாக தைத்துப் போட வேண்டுமே தவிர இப்படி நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என கண்டித்தேன் . வருத்தத்துடன் வெளியேறினார் . ஆனால் தவறுக்கு வருந்தி இப்படி தற்கொலை  முடிவை அவர் எடுப்பார் என நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லை . அவருக்காக கழகம் வருந்துகிறது . 'வானின் வண்ணம் ' திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டி இருப்பதால் நான்  இத்துடன் விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம் !'
-----

6 comments:

Ishu mad on blue சொன்னது…

yabba ithana charector vachu kadha eludhuradhuku thani therama venum ponga anna :) but en leveluku indha kadhalam over anna konjam ungaloda master piece nice anna keep on doing this

povi சொன்னது…

Nalla Irrukku

Manmathan சொன்னது…

Excellent coverage of the current political situation....Lot of characters with suitable names and also diff places and timings like Hollywood movies (few tamil movies also).... Super da..keep on rocking.....Lets wait and see wat ll happen to Gopal ex-minister ....

ram சொன்னது…

Awesome!!! so many characters involved.. have to read again...
sema twist at central and state level... pinnittinga...

Saravanakumar சொன்னது…

Hi vinoth,

In this story so many characters are coming and felt difficult to remember who is who...
What is the need to specify the time in this story?
Last page is really excellent. I appreciate your guts to take up political story...

ஜிஜி சொன்னது…

மன்னிக்கவும்.இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நீங்களும் ஸ்ரீவில்லிபுத்தூரா?ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் இருக்கிறீங்களா?மகிழ்ச்சி நமது ஊர்க்காரரை சந்தித்ததில்.
இப்போது சிறப்பு செய்தியான ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய உங்கள் கதை அருமையாக இருக்குங்க.